தீபாவளித் தொடர் விடுமுறை.. இன்று சென்னையில் மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கம்!
தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து அளிக்கப்பட்டுள்ள அரசுப் பொது விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இன்று நவம்பர் 9ம் தேதி மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடிவிட்டுப் பணிகளுக்குத் திரும்புவதற்கு வசதியாக, தமிழக அரசு சார்பில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் கூட்ட நெரிசல் மற்றும் பயணத் தேவைகளுக்கு ஏற்ப இன்று மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படவுள்ளன.
பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளும் வகையில், வழித்தடம் வாரியாக ரயில்கள் இயங்கும் நேரங்களைச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரிவாகப் பகிர்ந்துள்ளது.

நீலம் மற்றும் பச்சை வழித்தடங்ளில் ரயில்கள் காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயக்கப்படும். காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மற்றும் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயங்கும். மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் சேவை வழங்கப்படும். இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
மஞ்சள் வழித்தடத்தில் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பயணிகள் இந்த மாற்றப்பட்ட கால அட்டவண கவனத்தில் கொண்டு தங்களது பயணங்களை முன் கூட்டியே திட்டமிட்டுப் பயணிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
