தீபாவளி ஸ்பெஷல்.. சங்கு சக்கரம், ராக்கெட், புஸ்வானம் சாக்லேட்டுகள்.. சந்தையில் புதுசு!
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்களை களைக்கட்ட துவங்கியிருக்கும் நிலையில் தமிழகத்திலும் தீபாவளிக்காக புத்தாடை, பட்டாசுகள், இனிப்புக்கள் வாங்க மக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.திண்டுக்கல் ஆர்.வி.நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவகுருநாதன் . இவருடைய மனைவி புவனசுந்தரி.
சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கு 2 குழந்தைகள். புவனசுந்தரி அக்கம் பக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும் வீட்டிலேயே சாக்லேட் தயாரித்து கொடுத்து வந்தார். அதன் சுவை மிக அருமையாக இருக்கவே வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினர். தீபாவளிக்காக சாக்லேட்டில் புதுமைகளை புகுத்த நினைத்த புவனசுந்தரி பட்டாசு வடிவில் சாக்லேட்டுகளை தயாரிக்கத் தொடங்கினார்.

நிறம், வடிவம், தரம் புதுமை என அனைத்தும் மக்களை கவர்ந்துவிடவே அக்கம் பக்கத்தினர் மட்டுமல்ல வெளியூர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. 1 கிலோ ரூ.450 முதல் ரூ.1800 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாக்லேட் என்றாலே குழந்தைகள் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இழுக்கும் ருசியான இனிப்பு. கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் வீட்டிலேயே ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பது வழக்கம். அதுபோல தான் ஆரம்பத்தில் தொடங்கினேன். ஆரம்பத்தில் இலவசமாகவே பொதுமக்களுக்கு வழங்கி வந்தேன்.

தற்போது முழு மூச்சாக சாக்லேட் தயாரிப்பில் இறங்கியுள்ளேன். திண்டுக்கல்லின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப சாக்லேட்டுகள் வடிவம் பெற்றன. இதை பிரிட்ஜில் கூட வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.வெளியில் வைத்தாலே 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்.
தீபாவளி சமயம் என்பதால் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் வகையில் ராக்கெட், கம்பி மத்தாப்பு, வெடிகுண்டு, சங்கு சக்கரம், லட்சுமி பட்டாசு, புஸ்வானம் போன்ற பல்வேறு வடிவங்களில் சாக்லெட்டுகளை தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
