கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு - ஜி.பரமேஸ்வரா துணை முதலமைச்சரானார்!
கர்நாடக மாநிலத்தின் 34-வது புதிய முதல்வராகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், 'அரசியல் சாணக்கியர்' என்று அழைக்கப்படுபவருமான திரு. டி.கே.சிவக்குமார் இன்று மாலை 4.15 மணியளவில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். பெங்களூருவில் உள்ள ராஜ் பவனின் 'கிளாஸ் ஹவுஸ்' வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்குப் பதவியேற்பு மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணங்களைச் செய்து வைத்தார்.
கர்நாடக மாநிலத்தின் நீண்டகால முதலமைச்சர் பதவிக் கனவை நனவாக்கியுள்ள டி.கே.சிவக்குமார், தனது பதவியேற்பின் போது இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி, தனது ஆராதனைக்குரிய ஆன்மிக குருவான, மறைந்த ஸ்ரீ கங்காதர அஜ்ஜய்யா அவர்களின் திருப்பெயராலும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் டி.கே.சிவக்குமார் முதல்வராகப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பதவியேற்பதற்கு முன்பாக மேடையில் வைக்கப்பட்டிருந்த குருவின் திருவுருவப் படத்திற்கு அவர் மலர் தூவி ஆசி பெற்றார்.

முன்னாள் முதல்வர் சித்தராமையா கடந்த வாரம் தனது பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடத்தின் சுமுகமான அதிகாரப் பகிர்வு திட்டத்தின் கீழ் இந்த புதிய அமைச்சரவை தற்போது பொறுப்பேற்றுள்ளது.
டி.கே.சிவக்குமாருடன் இணைந்து, மாநிலத்தின் புதிய துணை முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.பரமேஸ்வரா பதவியேற்றுக் கொண்டார். அவர் அண்ணல் அம்பேத்கர் பெயரால் பிரமாணம் எடுத்தார். இவர்களுடன் சேர்த்து, முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் எம்பில்சி யாத்தீந்திரா சித்தராமையா, முன்னாள் சபாநாயகர் யு.டி.காதர், கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், கிருஷ்ண பைரே கவுடா, பிரியங்க் கார்கே உள்ளிட்ட 13 முக்கிய மூத்த தலைவர்கள் புதிய கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மற்றும் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த விழாவில் நேரில் கலந்துகொண்டு புதிய முதல்வர் டி.கே.சிவக்குமாருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
