சீமானைப் பொது வேட்பாளராக நிறுத்த திமுக -அதிமுக ரகசியப் பேச்சுவார்த்தை!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று, மே 10-ம் தேதி முதலமைச்சராகச் சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள சூழலில், ஆளுங்கட்சியின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் புதிய வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தவெக-வின் வாக்கு வங்கியைப் பிரிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பொது வேட்பாளராகக் களம் இறக்கத் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் திரைமறைவில் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 34.92 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுத் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்த தவெக, பாரம்பரியத் திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. உறுப்பினர் சேர்க்கையிலும் 2 கோடியைத் தாண்டி தவெக சாதனை படைத்துள்ளதால், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அக்கட்சியை வீழ்த்தப் பழைய அரசியல் பகைமைகளை மறந்து திமுக-அதிமுக ஓரணியில் இணையத் திட்டமிட்டு வருகின்றன.

தவெக-வின் வாக்குகள் அனைத்தும் தீவிரத் தமிழ் தேசிய மற்றும் இளைஞர்களின் வாக்குகளாக உள்ளதால், அதனைப் பிரிக்கச் சீமான் ஒருவரே சரியான தேர்வாக இருக்க முடியும் என இரு கட்சிகளின் மேலிடமும் கருதுகிறது. 'எதிரிக்கு எதிரி தோழன்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில், தவெக-வின் அரசியல் ஆதிக்கத்தை ஆரம்பத்திலேயே முடக்க வேண்டும் என்பதில் சீமானும் உறுதியாக இருப்பதால், இந்த ரகசியப் பேச்சுவார்த்தைக்கு அவர் இணங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அறிவாலய மற்றும் எடப்பாடி தரப்பு வட்டாரங்கள் நம்புகின்றன.
இடைத்தேர்தல் வரவிருக்கும் 6 தொகுதிகளில், அம்பாசமுத்திரம் தொகுதி மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது: கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற இசக்கி சுப்பையா, பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு முறைப்படி தவெக-வில் இணைந்தார். இதனால் காலியாக உள்ள அந்த அம்பாசமுத்திரம் தொகுதியில், தவெக சார்பில் மீண்டும் இசக்கி சுப்பையா களம் இறக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அவருக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு சீமானைப் பொது வேட்பாளராக நிறுத்தவே ரகசியப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒருவேளை இந்த உடன்பாடு எட்டப்பட்டால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல், சீமானுக்குப் பின்னால் இருந்து தங்களது தேர்தல் பணிகளையும், வாக்குச் சேகரிப்பையும் முழுமையாகச் செய்யத் திட்டமிட்டுள்ளன.
திமுக, அதிமுக மற்றும் நாதக ஆகிய மூன்று வெவ்வேறு துருவங்கள் ஒன்றிணைந்து தவெக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக இத்தகைய ஒரு வியூகத்தை வகுத்து வருவது கோட்டை வட்டாரத்திலும், தமிழக அரசியல் அரங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
