திமுக, அதிமுகவிலிருந்து தவெகவில் இணையும் தலைவர்கள்... செங்கோட்டையன் மாஸ்டர் பிளான்!
தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையன் தலைமையில் இந்த இணைப்புப் படலம் நடைபெற உள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருந்த பல முக்கியத் தலைவர்கள், செங்கோட்டையனை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த இணைப்பு குறித்த ஆலோசனைகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், சட்டமன்றத்தில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு பிரம்மாண்டமான விழா ஒன்றை நடத்தி அனைவரையும் கட்சியில் இணைக்கச் செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். இதற்கான உறுதிமொழியை அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ள நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுக மற்றும் திமுகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்படுபவர்கள் விலகுவது அந்த கட்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்யின் நிர்வாகத் திறமை மற்றும் மக்கள் செல்வாக்கைக் கண்டு ஈர்க்கப்பட்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தவுடன் தமிழக அரசியலில் இது ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். கொங்கு மண்டலத்தைத் தனது கோட்டையாக மாற்றத் தவெக எடுத்துள்ள இந்த அதிரடி நகர்வு, மற்ற அரசியல் கட்சிகளிடையே பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.
