"கொளத்தூரில் 30% வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகச் செயல்படவில்லை" - திமுக குற்றச்சாட்டு!

 
தேர்தல் கொளத்தூர்

கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு சரிபார்ப்பின் போது 30 சதவீதத்திற்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகச் செயல்படவில்லை என்றும், இது தொடர்பாகக் சட்டப்பூர்வ ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் விரைவில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் என்.ஆர். இளங்கோ பேசுகையில்,  கொளத்தூர் தொகுதியில் ஆய்வு செய்யப்பட்ட 8 வாக்குப்பதிவு இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் சரியாக வேலைசெய்யவில்லை. 157-வது வாக்குச்சாவடிக்கான இயந்திரங்களைச் சரிபார்த்தபோது, அதில் இருக்க வேண்டிய 7 'டேகுகளும்' புத்தம் புதிதாக, முகவரி மற்றும் விவரங்கள் ஏதுமின்றி காலியாக இருந்தன. இது குறித்துக் கேள்வி எழுப்பியபோது அதிகாரிகள் இதனை "மனிதத் தவறு" என்று சாதாரணமாகக் கூறி கடந்து செல்லப் பார்க்கிறார்கள்.

ஸ்டாலின் தேர்தல் தமிழகம்

திமுக சட்டத்துறை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், கொளத்தூரில் குளறுபடிகள் வெளிப்பட்ட நிலையில் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகப் பாதுகாக்கப்படவில்லை என்பதும், தேர்தல் முறைகேடாக நடந்துள்ளது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது எனத் தெரிவித்துள்ள அவர், தேர்தல் அதிகாரி மற்றும் இயந்திரங்களைத் தயாரித்த நிறுவனத்திடம் அறிவியல் பூர்வமாக 19 கேள்விகளை எழுப்பியுள்ளதாகக் கூறினார். இது தொடர்பாகக் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் கலந்தாலோசித்து, விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.