அதிர்ச்சியில் திமுக கூட்டணி... “ வேட்பாளரை தொகுதிக்குள் விடமாட்டோம் - ஈரோடு கிழக்கில் வெடித்த சர்ச்சை!
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகக் கோபிநாத் பழனிப்பன் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வேட்பாளரைத் தொகுதிக்குள் நுழைய விடமாட்டோம் என்று முன்னாள் மாவட்டத் தலைவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன், "அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை நடத்திய நேர்காணலில் 5 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், அந்தப் பட்டியலில் இல்லாத ஒரு புதிய நபரை வேட்பாளராகத் தேர்வு செய்தது ஏன்? இது ஒரு கண்துடைப்பு நாடகமா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"கட்சிக்காகப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனச் சொந்தப் பணத்தைச் செலவு செய்து உழைத்த எங்களைப் போன்றவர்களை ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் ஏன் கவனிக்கவில்லை?" என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்குத் தொடர்பில்லாத ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று தெரிவித்த மக்கள் ராஜன், "வேட்பாளர் கோபிநாத் பழனிப்பனைத் தொகுதிக்குள் தேர்தல் பிரசாரத்திற்கு விடமாட்டோம்" என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதல் கூட்டணிக் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிருப்தி அடைந்துள்ள நிர்வாகிகளைச் சமாதானம் செய்ய மாநிலத் தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது.
