திமுக கூட்டணி அதிர்ச்சி... மதிமுக எம்.எல்.ஏ. சாத்தூர் ரகுராமன் பாஜகவில் இணைந்தார்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், ம.தி.மு.க-வைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ ரகுராமன் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் சாத்தூர் தொகுதியில் ரகுராமன் போட்டியிட்டார். அப்போது தி.மு.க-வின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க-விற்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர் மற்றும் சீர்காழி ஆகிய நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் ரகுராமன் வெற்றி பெற்ற சாத்தூர் தொகுதி ம.தி.மு.க-விற்கு ஒதுக்கப்படவில்லை. தொடர்ந்து சாத்தூர் தொகுதியைத் தி.மு.க தனது கைவசம் வைத்துக் கொண்டதால், மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் ரகுராமன் அதிருப்தியில் இருந்து வந்தார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ரகுராமன், இன்று முறைப்படி பாஜகவில் இணைந்தார்.
ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரே, எதிர்க்கட்சியான பாஜகவில் இணைந்திருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. தென் தமிழகத்தில் செல்வாக்கை அதிகரிக்க முயன்று வரும் பாஜகவிற்கு, ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ-வின் வருகை கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

ம.தி.மு.க இம்முறை மிகக் குறைந்த தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் சூழலில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இந்தத் தொகுதிப் பங்கீடு ஏற்கனவே புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது. ரகுராமனின் இந்த முடிவு, வரும் தேர்தலில் சாத்தூர் தொகுதியின் வெற்றி வாய்ப்பில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
