வாணியம்பாடியில் திமுக - அதிமுக பயங்கர மோதல்.. வேட்பாளர் வருகையால் வெடித்த கலவரம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வள்ளிப்பட்டில், இன்று ஏப்ரல் 23 வாக்குப்பதிவின் போது திமுக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால் அந்தப் பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்தது. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் சையத் பாரூக், விதிமுறைகளை மீறி தனது கட்சி நிர்வாகிகளுடன் வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர் கூட்டமாகச் சென்றதை அங்கிருந்த அதிமுகவினர் தட்டிக்கேட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி, இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோதலைக் கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும், அத்துமீறி உள்ளே நுழைந்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அதிமுகவினர் வாக்குச்சாவடி முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் கூடுதல் கமாண்டோ படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவை மீண்டும் தொடங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
