"தி.க., திமுக என்றைக்கும் இணைந்தே இருக்கும்” - சேலத்தில் கே.என்.நேரு பேச்சு!

 
கே.என்.நேரு கே.என்.நேரு

சேலத்தில் நடைபெற்ற திராவிட இயக்கக் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கொள்கை ரீதியாக என்றென்றும் இணைந்தே பயணிக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கே.என்.நேரு, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு தற்காலிக சக்திகள் தோன்றி மறைந்தாலும், திராவிடப் பேரியக்கங்களின் அடித்தளம் என்றும் அசைக்க முடியாதது என்று குறிப்பிட்டார்.

கே.என்.நேரு

"அரசியல் பொதுவாழ்விற்கு ஒரு சிலர் தற்காலிகமாக வருவார்கள், கொஞ்சக் காலத்தில் காணாமலும் போவார்கள். ஆனால் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காகப் போராடும் திமுகவும், அதன் தாய் இயக்கமான திராவிடர் கழகமும்தான் இங்கு நிரந்தரமாக நிலைத்து வாழ்பவை. ஒரு காலகட்டத்தில் 'திமுகவை ஒழிப்போம், அழிப்போம்' என்று மேடைகளில் சவால் விட்டுப் பேசியவர்களைக் கூட, அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து வந்தபோது இன்முகத்தோடு வரவேற்று அரவணைக்கும் பக்குவம் கொண்டவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தங்களைக் கடுமையாக, தவறான முறையில் விமர்சிப்பவர்களைக் கூட அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் வாழ வைக்கும் உன்னத குணம் கொண்ட இயக்கம் தான் திமுக" என்று அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

மேலும், திமுகவிற்கும் திராவிடர் கழகத்திற்குமான உறவு என்பது வெறும் தேர்தல் அரசியலுக்காகவோ அல்லது தற்காலிகப் பயன்களுக்காகவோ உருவானது அல்ல என்பதை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளும், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளும்தான் இந்த இரு இயக்கங்களின் உந்துசக்தி என்றும், அதனால் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கொள்கை அடிப்படையில் என்றைக்கும் இணைந்தே செயல்படும் என்றும் கே.என்.நேரு தனது உரையில் மிக உறுதியாகப் பதிவு செய்தார்.