"திமுகவும் தவெகவும் ஒன்றுதான்"... சனாதன விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்!
தமிழக அரசியல் களத்தில் சனாதன தர்மம் குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிலைப்பாட்டை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சனாதனத்திற்கு எதிராக திமுகவின் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு ஆதரவாக, தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா கருத்து தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, உதயநிதியின் பேச்சுக்கு தவெக எம்.எல்.ஏ. ஆதரவு அளித்ததன் மூலம், திமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் கொள்கை ரீதியாக ஒன்றுதான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

மதச்சார்பின்மை என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக, தற்போது தேர்தலுக்குப் பிறகு பொதுமக்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மக்களை ஏமாற்றும் இத்தகைய போக்கிற்கு விரைவில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுகவின் சனாதன எதிர்ப்புப் பேச்சுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் ஆதரவு தெரிவித்திருப்பது, இவ்விரு கட்சிகளுக்கும் இடையே மறைமுகத் தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
