ஆதவ் அர்ஜுனா மீது திமுக தொடர்ந்த வழக்கு... இன்று உச்ச நீதிமன்றத்தில் அவசர விசாரணை!
தமிழகத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, தற்போதைய முதலமைச்சர் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தற்பொழுது மத்திய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் பேசிய தவெக அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "கரூரில் ஒரு கணக்கு உள்ளது, அதை முடிக்காமல் விடமாட்டோம்" என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சுக்கு எதிராகத் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடந்த ஜூலை 2-ம் தேதி பேசிய கருத்துக்கள், தற்போது நடைபெற்று வரும் கரூர் வழக்கின் சாட்சிகளைப் பயமுறுத்தும் மற்றும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே அவர் மீது சிபிஐ உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் மற்றும் இதர அரசுச் சலுகைகளை வழங்குவதற்காக, முதலமைச்சர் விஜய் வரும் ஜூலை 10-ம் தேதி கரூர் செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரே மிக முக்கியச் சாட்சிகளாக உள்ளனர். இத்தகைய சூழலில், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் நேரிடையாக அவர்களைச் சந்தித்துப் பேசுவது சிபிஐ விசாரணையின் நடுநிலைமையைப் பாதிக்கும் மற்றும் சாட்சிகளைக் கலைக்கும் முயற்சியாக அமையும்.
ஆர்.எஸ்.பாரதி சார்பாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹுசைஃபா அஹ்மதி, நீதிபதிகள் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு அமர்வின் முன்பு இந்த விவகாரத்தை அவசரமாக முறையிட்டார்.

"சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ள சூழலில் சாட்சிகளைக் கலைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடப்பதால், வரும் 10-ஆம் தேதி முதலமைச்சர் கரூர் செல்வதற்கு முன்பாக இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்" என வழக்கறிஞர் கோரினார். இதைக் கேட்ட நீதிபதிகள், "தற்போதைய நிலையில் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினர். எனினும், வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த மனுவை இன்று முறைப்படி பட்டியலிட்டு விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.
அதன்படி, தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான சட்டப் போராட்டமாக மாறியுள்ள இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் சிபிஐ விசாரணையின் போக்கை உறுதி செய்ய நீதிமன்றம் என்ன மாதிரியான இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் உற்று நோக்கி வருகிறது.
