வீடு புகுந்து திமுக நிர்வாகிக்கு கத்திக்குத்து... தவெகவினர் வெறித்தனம்!

 
கத்திக்குத்து கத்திக்குத்து

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஒருவரை, தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த இருவர் கத்தியால் குத்தித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூனிமேடு குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (71). இவர் திமுகவின் மாநில தலைமை செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வன்னி அரசுக்காகப் பாலகிருஷ்ணன் வாக்கு சேகரித்துள்ளார். அப்போது கூனிமேடு வாக்குச்சாவடி அருகே இருந்த தவெக நிர்வாகிகளுக்கும் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் தலையிட்டு அவர்களைச் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

தவெக விஜய்

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பாலகிருஷ்ணன் தனது வீட்டின் வராண்டாவில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் பவனேஷ் (24) மற்றும் அஜித் ஆகிய இருவரும் பாலகிருஷ்ணனைத் தாக்கியுள்ளனர். பவனேஷ் தனது கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் பாலகிருஷ்ணனின் கன்னத்தில் குத்தியதுடன், இரும்பு கம்பியாலும் அவரைத் தலையிலும் உடலிலும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

பாலகிருஷ்ணனின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், அவரை மீட்டுப் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பவனேஷ் மற்றும் அஜித்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஸ்டாலின் திமுக

தேர்தல் முடிந்துள்ள நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதியவர் என்றும் பாராமல் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.