“திமுக இப்போது அம்மணமாகிவிட்டது” - நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம்!

 
நாஞ்சில் சம்பத்

மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுகவின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தொகுதி மறுவரையறையை ஆதரிப்பதன் மூலம் திமுக இப்போது அம்மணமாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ்  சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாஞ்சில் சம்பத், "தொகுதி மறுவரையறையை திமுக ஆதரிப்பதன் மூலம், ஏற்கெனவே அலங்கோலமாகிவிட்ட திமுக இப்போது அம்மணமாகிவிட்டது. தொகுதி மறுவரையறையின் மூலம் சங் பரிவாரங்களின் சதியரசியலுக்குச் சாமரம் வீசுகிறது திமுக. அமித் ஷாவின் அரண்மனையில் அறிவாலயத்தின் ஆசாடபூதிகள் போய் நிற்பதைக் கண்டு விலங்குகள்கூடப் பின்பொறியால் சிரிக்கின்றன" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.


"தொகுதி மறுவரையறை தேர்தல் வரைபடத்தை மட்டுமல்ல, அரசியல் எல்லையையும் தலைகீழாக மாற்றும். தேர்தல் மறுவரையறை மாநில உரிமைகளைப் பறிக்கும்; இது ஏகபோக ஆட்சிக்கு வித்திடும்! கனிமொழியே பாரதிய ஜனதாவின் மொழியில் பேசுவது விந்தையாக இருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாஞ்சில் சம்பத்

திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவில் தமிழ்நாட்டின் விகிதாச்சாரப் பங்கு குறையாமல் 59 மக்களவைத் தொகுதிகள் கிடைப்பதால், தமிழ்நாட்டின் நலன் கருதியே ஆதரவு அளிப்பதாகத் திமுக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனினும், திமுகவின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிர்க்கட்சிகளும் முன்னாள் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.