குஷியில் திமுக... அமலாக்கத்துறை உத்தரவு ரத்து - ஜெகத்ரட்சகனின் ரூ.89 கோடி மதிப்புள்ள சொத்துக்களைத் திரும்ப ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 
ஜெகத்ரட்சகன் ஜெகத்ரட்சகன்

அந்நிய செலாவணி மோசடி புகாரில் முடக்கப்பட்ட ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துக்களை விடுவிக்கக் கோரி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறியதாக ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில காலத்திற்கு முன்பு ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜெகத்ரட்சகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஜெகத்ரட்சகன்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வின் முக்கியக் கருத்துக்களாக, ஜெகத்ரட்சகனின் சொத்துக்களைப் பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் உத்தரவு அடிப்படை ஆதாரமற்றது மற்றும் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. எனவே, அந்த முடக்கும் உத்தரவை ரத்து செய்வதோடு, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை உடனடியாக அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வருடன் இணைந்து பிரசாரம் செய்து வரும் ஜெகத்ரட்சகனுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பெரிய 'கிளீன் சீட்' ஆகக் கருதப்படுகிறது.

ஜெகத்ரட்சகன்

"மத்திய அரசு விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரைப் பழிவாங்குவதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு தக்கப் பாடம்" என திமுக நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இது தொழில்நுட்ப ரீதியான விடுதலையே தவிர, குற்றச்சாட்டுகள் இன்னும் நிலுவையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினரான இவர், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் மதுபான ஆலைகள் எனப் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். திமுகவின் தேர்தல் நிதி மற்றும் வியூகங்களில் மிக முக்கியமான பங்கு வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.