பதற்றத்தில் திமுகவினர்... அன்பில் மகேஷுக்கு ஜாமின் கிடைக்குமா? - இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை!
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறிப் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 'கட்சி நிதி' என்ற பெயரில் பல கோடி ரூபாய் லஞ்சமாகப் பெற்றதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே பி.டி. அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷ், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக அன்பில் மகேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி முறையிட்டார்.

இதனைப் பரிசீலித்த நீதிபதி, ஜாமின் கோரும் மனுவுக்கு எண்ணிடும் பணிகள் முடிந்தால் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதேபோல், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்திருந்த மற்றொரு மனு மீதான விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்த மனு மீதான விசாரணையை வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு நீதிமன்றம் ஜாமின் மறுத்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷுக்கு ஜாமின் கிடைக்குமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
