"திமுக தயவில் தவெக ஆட்சி; விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!" - மு.க.ஸ்டாலின் முழக்கம்!

 
ஸ்டாலின் ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.

அரசியல் களத்தில் தவெகவின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நகர்வுகளை விமர்சித்துப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தங்களது கட்சியின் பலத்தை நிர்வாகிகளுக்கு நினைவூட்டினார். "தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் தவெக ஆட்சியானது, திமுகவின் தயவோடுதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தவெக ஆட்சிக்கு நாம் மிக விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காக நம்முடைய கழக தோழர்கள் அனைவரும் தற்போதிலிருந்தே முழு உறுதியோடும், அர்ப்பணிப்போடும் களப்பணியாற்ற வேண்டும்" என்று பேசினார்.

திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் அனைவரும் உடனடியாக மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்றும், மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையைப் பெற்று திமுகவை வற்றாத வெற்றிப்பாதைக்குக் கொண்டு வர கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கட்டளையிட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் இந்தச் சூழலில், தவெகவின் அசுர வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் திமுக தற்பொழுது தனது அரசியல் வியூகங்களை மாற்றி அமைக்கத் தொடங்கியுள்ளதை மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு காட்டுகிறது.

ஆளுங்கட்சியான தவெகவில் அதிமுகவினர் பெருமளவில் இணைந்து வரும் நிலையில், "திமுகவின் தயவில் தான் தவெக ஆட்சி நடக்கிறது" என மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது, தவெக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளுக்கும் இடையேயான நேரடி அரசியல் யுத்தத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளது.