"திமுக செய்வதே குதிரை பேரம்" - மாணிக்கம் தாகூர் அதிரடி!
அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைவது குதிரைப்பேரம் அல்ல என்றும், மாறாகத் தவெக எம்.எல்.ஏ-க்களிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துத் திமுகவினர் பேரம் பேசுவதே உண்மையான குதிரைப்பேரம் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெக-வில் இணைந்ததைச் சுட்டிக்காட்டித் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு மாணிக்கம் தாகூர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
"அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியைத் துறந்து, முறைப்படி ராஜினாமா செய்துவிட்டுத் தவெக-வில் இணைவது எப்படிப் பேரமாகும்? அவர்கள் தங்களது கொள்கை முடிவின்படி பதவியை இழந்துவிட்டுத் தான் மாற்றுப் பாதைக்குச் செல்கிறார்கள். இதில் எவ்வித சட்டவிரோதச் செயலும் இல்லை," என அவர் விளக்கியுள்ளார்.
"ஆனால், ஆளுங்கட்சியாக இருக்கும் தவெக-வின் எம்.எல்.ஏ-க்களைப் பணம் கொடுத்துத் தங்கள் பக்கம் இழுக்கத் திமுகவினர் திரைமறைவில் முயற்சிப்பதும், அதற்குப் தரகர்களைப் பயன்படுத்துவதும் தான் அப்பட்டமான ஜனநாயக் படுகொலை" என்று அவர் சாடியுள்ளார்.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி அவர் மேலும் பேசுகையில், "தமிழகத்தில் தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசியதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதே திமுகவின் குதிரைப்பேர அரசியலுக்கு மிக முக்கியச் சான்றாகும். அதிகார பலம் மற்றும் பண பலத்தைக் கொண்டு மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க நினைப்பது தான் உண்மையான குதிரைப்பேரம். இதைத் தான் திமுக செய்து வருகிறது என்பதைப் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்."
தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் திமுக-காங்கிரஸுடன் நீண்ட காலக் கூட்டணியில் இருந்து வந்த நிலையில், தவெக மற்றும் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும், திமுக-வின் அரசியல் நகர்வுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
