“விசிக - பாமக மோதலுக்குத் திமுக தான் காரணம்!” - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

 
அன்புமணி திருமாவளவன் அன்புமணி திருமாவளவன்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையிலான உறவு குறித்துப் பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களிடையே நிலவும் நீண்டகால மோதல் போக்கிற்குத் திமுக-வின் அரசியல் சூழ்ச்சியே காரணம் என அன்புமணி சாடியுள்ளார்.

திருமாவளவன்

“எனக்கும் திருமாவளவனுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், பாமக மற்றும் விசிக ஆகிய இரண்டு இயக்கங்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவுவதற்குக் காரணமே திமுக தான். தங்களது அரசியல் லாபத்திற்காக இரு சமூகங்களையும் திமுக பிரித்து வைத்திருக்கிறது” எனக் குற்றம் சாட்டினார்.

திமுக கூட்டணியில் விசிக-வின் நிலை குறித்துப் பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் திருமாவளவனுக்கு, அந்தக் கூட்டணியில் இதுவரை உரிய மதிப்பும், மரியாதையும் வழங்கப்படவில்லை. அவர் ஒரு மூத்த தலைவர் என்ற அங்கீகாரத்தைக் கூட திமுக வழங்கத் தவறிவிட்டது” எனத் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் ஸ்டாலின்

சமீபகாலமாக வட மாவட்டங்களில் விசிக மற்றும் பாமக இடையே வாக்கு வங்கி அரசியல் தீவிரமடைந்துள்ள நிலையில், அன்புமணியின் இந்த ‘திமுக எதிர்ப்பு’ பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. தவெக தலைவர் விஜய்யின் வருகையால் வட மாவட்டங்களில் வாக்குகள் சிதறும் சூழலில், அன்புமணி ராமதாஸின் இந்தக் கருத்து விசிக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.