திமுக பிரமுகர் வீட்டில் ரூ. 11 லட்சம் பறிமுதல்... பரபரக்கும் ஸ்ரீரங்கம் தொகுதி!

 
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சோதனை திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சோதனை

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், திருச்சியில் திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (எ) அழகப்பன். இவர் திமுகவின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகப் பணியாற்றியவர்.

பணம் ரொக்கம் சோதனை பறிமுதல்

வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக இவரது வீட்டில் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. வருமான வரித்துறை கூடுதல் மாவட்ட அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து காந்தியின் வீட்டில் இன்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். காந்தி மற்றும் அவரது மகனுக்குச் சொந்தமான வீடுகளில் அதிகாரிகள் தனித்தனியாகச் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ. 11 லட்சம் ரொக்கப் பணம் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பணம், ஸ்ரீரங்கம் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பணம் தேர்தல் செலவினங்களுக்காக வைக்கப்பட்டதா அல்லது வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இ பாஸ் வாகன சோதனை

தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வீடுகளில் நடைபெறும் இத்தகைய சோதனைகள் மற்றும் பணப் பறிமுதல் சம்பவங்கள் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஸ்ரீரங்கம் தொகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் மூலம் தேர்தல் அதிகாரிகள் தங்களது கெடுபிடியை மேலும் அதிகரித்துள்ளனர்.