முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது திமுக தலைமை கடும் அதிருப்தி!

 
ஸ்டாலின் சேகர்பாபு ஸ்டாலின் சேகர்பாபு

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு மீது கட்சித் தலைமை கடுமையான அதிருப்தியில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் மிக முக்கியமான கோட்டையாகக் கருதப்பட்ட சென்னை கொளத்தூர் தொகுதியின் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தையே உலுக்கியுள்ளன. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுங்கட்சியான தவெக வேட்பாளரிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

கடந்த மூன்று தேர்தல்களாக மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வந்த தொகுதியில், தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்தத் தோல்வி திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதலமைச்சரின் இந்தத் தோல்விக்குச் சென்னை வடக்குப் பகுதியின் தேர்தல் பொறுப்பாளராகச் செயல்பட்ட முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் தன்னிச்சையான போக்கே காரணம் என்று திமுகவினர் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கட்சியின் அடிமட்டத் தொண்டர்களையும், நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் உள்ளூர் வட்டார, பகுதிச் செயலாளர்களையும் மதிக்காமல் சேகர்பாபு தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாக விமரிசனங்கள் எழுந்துள்ளன. கொளத்தூர் தொகுதியின் உண்மை நிலவரத்தையும், அங்கு நிலவிய தவெக-வின் பலத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல், கட்சித் தலைமைக்கு எல்லாம் சாதகமாக இருப்பதாகத் தவறான கள நிலவரத் தரவுகளை அவர் வழங்கியதாகக் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள சூழலில், இந்தத் தோல்வி குறித்த விவாதம் முதன்மையாக இருக்கும் எனத் தெரிகிறது. களப்பணியில் சுணக்கம் காட்டியது மற்றும் தேர்தல் உத்திகளில் கோட்டை விட்டதன் பின்னணியில், சென்னை கிழக்கு மாவட்டக் கழக அமைப்பில் சில அதிரடி மாற்றங்களைச் செய்ய மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாகவும், அதன் முதற்கட்டமாகக் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து சேகர்பாபு தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவாலயத் தகவல்கள் கசிகின்றன.