“250 பேரின் கிட்னிகளைத் திருடிய திமுகவினர்!” - அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

 
அண்ணாமலை ஸ்டாலின் அண்ணாமலை ஸ்டாலின்

ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் வெளியிட்ட "கிட்னி திருட்டு" குறித்த புகார் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. பிரச்சார மேடையில் பேசிய அண்ணாமலை, திமுக நிர்வாகிகள் மீது மிகத் தீவிரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்:

"ராசிபுரம் பகுதியில் உள்ள கைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு, திமுக நிர்வாகிகள் சுமார் 250 கிட்னிகளைத் திருடி உள்ளனர். இது சாதாரணக் குற்றமல்ல. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், இந்த கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தப்ப முடியாது; அவர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வது உறுதி" என எச்சரித்தார்.

அண்ணாமலை

அமைச்சர் மதிவேந்தனை 'கோபாலபுரத்தின் கொத்தடிமை' என விமர்சித்த அண்ணாமலை, தொகுதிப் பிரச்சனைகளை அடுக்கினார். "ரியல் எஸ்டேட் கமிஷனுக்காக ஊருக்கு வெளியே 8 கி.மீ தொலைவில் பேருந்து நிலையத்தைக் கட்டி மக்களைத் துன்புறுத்துகின்றனர். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வந்தவுடன் இந்த ஆணை ரத்து செய்யப்பட்டு, பழைய இடத்திலேயே பேருந்து நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்."

"திமுக கொடுத்த 511 வாக்குறுதிகளில் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 99 சதவீதம் முடித்துவிட்டதாக முதல்வர் பொய் சொல்கிறார்." வேட்பாளர் பிரேம்குமாரைப் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமியின் தூதுவர் என அழைத்த அண்ணாமலை, அதிமுக - பாஜக - பாமக கூட்டணி ஒரு 'உண்மையான ஜனநாயகம்' கொண்ட கூட்டணி என்றார்.

அண்ணாமலை

மரவள்ளிக் கிழங்கு ஆராய்ச்சி நிலையக் கிளை, வாசனைத் திரவிய தொழிற்சாலை மற்றும் ராசிபுரத்தைச் சுற்றி ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். முன்னதாக மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கிய அண்ணாமலைக்கு, அதிமுக, பாஜக மற்றும் பாமக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணாமலையின் இந்த "கிட்னி திருட்டு" புகாருக்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.