திமுக எம்எல்ஏ சி.சின்னசாமி காலமானார் - மு.க.ஸ்டாலின் இரங்கல்!
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு (தனி) தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரான சி.சின்னசாமி (73) உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், பேர்ணாம்பட்டு (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றினார் சி.சின்னசாமி. வேலூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்காகத் தொடக்கம் முதலே அயராது பாடுபட்ட அவர், அப்பகுதி மக்களின் மிக முக்கியத் தலைவராகவும், பேரியக்கத்தின் முகமாகவும் திகழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
முன்னாள் எம்எல்ஏ சி.சின்னசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான செய்திக்குறிப்பில், பேர்ணாம்பட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.சின்னசாமி மறைவுற்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தனது பதவிக்காலத்தில் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நன்கு உணர்ந்து, அவர்களுக்காகத் தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர். பல்வேறு நலத்திட்டங்களை முன்னின்று செயல்படுத்திய அர்ப்பணிப்புமிக்க மக்கள் பிரதிநிதி. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், பேர்ணாம்பட்டு பகுதி கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த முன்னாள் எம்எல்ஏ சின்னசாமியின் உடலுக்கு திமுக உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலரும் நேரில் சென்று தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
