திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் அரசு அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இழிவாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மீது தியாகதுருகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) லலிதா, இது தொடர்பாகத் தமிழ்நாடு வாழ்வாதார இயக்க மேலாண்மை இயக்குநர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டப் பணியாளர் நியமனம் தொடர்பாகத் தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், சாதி பார்த்துப் பணிபுரிவதாக இழிவான முறையில் பேசியதாகவும், பணியில் நீடிப்பது குறித்து மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் அநாகரிகமாகக் குறுஞ்செய்தி அனுப்பியதுடன், தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், தியாகதுருகம் காவல்துறையினர் தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 132 (அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்), 351(2) (கொலை மிரட்டல் / மிரட்டல் விடுத்தல்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அதே மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீதும் பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
