விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை!

 
மார்க்கண்டேயன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் இன்று சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையானார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜூலை 19-ல் வழக்குப்பதிவு செய்து, ஜூலை 20 அன்று எம்.எல்.ஏ மார்க்கண்டேயனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்

தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவரது ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. கீழ்நீதிமன்றங்கள் ஜாமீன் மறுத்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மார்க்கண்டேயன்

இனி வருங்காலங்களில் இதுபோன்று பேசமாட்டேன் எனத் தூத்துக்குடி நீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரம் (Undertaking Affidavit) தாக்கல் செய்ய வேண்டும். தூத்துக்குடி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும். நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ பங்கேற்க வேண்டியிருப்பதால், சட்டமன்ற நிகழ்வுகள் நடைபெறும் நாட்களில் காவல்நிலையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நிபந்தனைகளின்படி ஜாமீன் நடைமுறைகள் பூர்த்தியானதைத் தொடர்ந்து, அவர் பாளையங்கோட்டை சிறையிலிருந்து முறைப்படி விடுவிக்கப்பட்டார்.