திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை!
தமிழக முதல்வர் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 22) விசாரணை நடைபெறவுள்ளது.
கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் விஜய் குறித்துப் பேசியது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கைது செய்தனர்.

மாவட்டக் காவல் அலுவலகத்தில் வைத்து சுமார் 11 மணி நேரம் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சுமதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஆன்லைன் வழக்கு பட்டியலில் இதற்கான விசாரணை இன்று நடைபெற உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
