சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு - திரையில் நாயகன், தரையில் வில்லன்!
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கவுள்ள நிலையில், கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பேரவை வளாகத்தில் அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தவெக அரசுக்கு எதிராக திமுக-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவை வளாகத்தின் நுழைவாயில் பகுதியில் திரண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் கைகளில் ஏந்தியிருந்த பதாகைகளில், "திரையில் நாயகன் தரையில் வில்லன்", "வாயைத் திறங்க CM, கதறல் கேட்குதா CM?", , "சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?", "மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்", "தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி" என்று வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'நான் முதல்வன்' உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திட்டங்களின் பெயர்களைப் புதிய அரசு மாற்றி வருவது மற்றும் அண்மையில் கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சட்டம்-ஒழுங்கு, மக்கள் நலப் பிரச்சினைகளை முன்வைத்தே திமுகவினர் இந்த கடுமையான பதாகைப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய தவெக அரசின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, எதிர்க்கட்சியான திமுக பேரவைக்கு வெளியே இப்படி ஒரு பிரம்மாண்ட கூட்டுப் போராட்டத்தை நடத்தியிருப்பது, நடப்புக் கூட்டத்தொடரில் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான விவாதங்களும் அரசியல் மோதல்களும் வெடிக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
