முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு - சட்டமன்றப் பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

 
திமுக வெளிநடப்பு சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (ஜூன் 23), முதலமைச்சர் விஜயின் உரையின் போது அவையில் கடுமையான கூச்சல் குழப்பம் நிலவியதுடன், ஆளுங்கட்சியின் போக்கைக் கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு அவையில் எதிர்ப்பு தெரிவிக்கப் போதிய வாய்ப்பு தரப்படவில்லை எனக் கூறி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது, "கடந்த 50 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்குப் பெரும் நிதி நெருக்கடிதான் பரிசாகக் கிடைத்துள்ளது என்றும், கட்சி நிதி என்ற பெயரில் அடிக்கப்பட்ட கொள்ளைப்பணம் தற்போது மீட்கப்பட்டு வருகிறது" என்றும் முந்தைய ஆட்சிகளைத் தாக்கிப் பேசினார்.

க்ட்ஃப்

முதலமைச்சரின் இந்த உரைக்கு அவையிலிருந்த திமுக உறுப்பினர்கள் உடனடியாகத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். எந்தவொரு ஆதாரமும் இன்றி, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முதலமைச்சர் விஜய் அவையில் பொத்தாம் பொதுவாகக் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதாகக் கூறி திமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.

முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தங்களது தரப்பு விளக்கத்தையோ அல்லது மறுப்பையோ பதிவு செய்யச் சபாநாயகர் முறையான அனுமதி வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள் அனைவரும், அவையைக் கண்டித்து வரிசையாக வெளிநடப்பு செய்தனர்.

உதயநிதி சட்டப்பேரவை

சட்டமன்றப் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவினர், சட்டமன்ற மரபுகளை மீறி எதிர்க்கட்சிகள் மீது சேற்றை வாரி இறைக்கும் தளமாகப் பேரவை பயன்படுத்தப்படுவதாகக் சாடினர். முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரும் அவையைப் புறக்கணித்து வெளியேறிய இந்தச் சம்பவத்தால், தலைமைச் செயலகப் பேரவை வளாகத்தில் இன்று பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.