முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசிய விவகாரம் - திமுக எம்பி ஆ.ராசா மீது போலீசில் புகார்!

 
ஆ.ராசா

தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் விமர்சித்துப் பேசிய திமுக எம்பி ஆ.ராசா அவர்களின் பேச்சு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், அதற்கு முன்னதாக திருவாரூர் நிகழ்ச்சியில் அவர் பேசிய அவதூறு கருத்துகளுக்காகத் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துத் தொடர்ந்து அவதூறான மற்றும் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்து வருவதாகக் கூறி, பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

ராசா

பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவரான ராசா மணிகண்டன் என்பவர் இந்தத் துணிச்சலான புகாரை நேரடியாக எஸ்பி அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார். மருத்துவர் ராசா மணிகண்டன் அளித்துள்ள அந்தப் புகார் மனுவில், கடந்த ஜூன் 25, 2026 அன்று திருவாரூரில் ஒரு பொது நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்பி ஆ.ராசா, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலும் மிகக் கடுமையான அவதூறு கருத்துகளைப் பேசியுள்ளார்.

ராசா

மாநிலத்தின் மிக உயரிய பதவியில் இருக்கும் முதலமைச்சரை, பொறுப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஆ.ராசா பொதுவெளியில் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவது சட்டப்படி குற்றமாகும் என்றும், எனவே இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு அவர் மீது தகுந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார்தாரர் வலியுறுத்தியுள்ளார். இந்தப் புகார் மனுவைத் தொடர்ந்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.