"சிறைக்கும் கைதுக்கும் அஞ்ச மாட்டோம்" - திமுக எம்பி கனிமொழி ஆவேசம்!

 
கனிமொழி

பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின், திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் தவெக அரசின் நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி எம்.பி பேசுகையில்,  "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து மோசமாக உள்ளது. ஆட்சியில் இருக்கும் தவெகவிற்கு ஜனநாயகத்தின் மீது கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. தவெக அரசை விமர்சிப்பவர்களை எல்லாம் சிறையில் அடைக்கிறார்கள். யாரோ ஒருவருக்குப் பயந்துகொண்டுதான் அவர்கள் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்."

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்

"சிறைகளுக்கும் கைதுகளுக்கும் அஞ்சுபவர்கள் திமுகவினர் அல்ல. திமுகவிற்குப் பாளையங்கோட்டை சிறை ஒன்றும் புதிதல்ல; இதை நாங்கள் பெருமையாகத் தான் நினைக்கிறோம். பொய் வழக்குகளுக்கும் கைதுகளுக்கும் திமுக ஒருபோதும் பயப்படாது."

"எதிர்க்கட்சிகளின் குரலை அடக்கவே காவல் துறையை அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் ஒருபோதும் எடுக்கப்பட்டது இல்லை." தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

"தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும். தமிழகப் பிரச்சினைகளுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான நோக்கம்."

"எந்தக் காலத்திலும் திமுக அதிமுகவை நெருங்கியது கிடையாது என்றாலும், தமிழகத்தின் உரிமைக்காகப் போராட வேண்டிய காலத்தில் திமுகவும் அதிமுகவும் இணைந்து சென்று பிரதமரைச் சந்தித்து மனு அளித்துள்ளோம்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.