திமுக எம்பி காரைக் கண்டு கூச்சலிட்ட தவெக தொண்டர்கள் - அமைதிப்படுத்திய தவெக அமைச்சர்!
வேலூரில் தவெக சார்பில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியின் போது, திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் கார் கடந்து சென்றதால் தொண்டர்கள் திடீரென முழக்கமிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் தவெக சார்பில் 'ஐம்பெரும் விழா' என்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், தவெகவைச் சேர்ந்த அமைச்சர் விஜய் பாலாஜி மேடையில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, வேலூர் தொகுதி திமுக எம்பி கதிர் ஆனந்த், விழா நடைபெற்றுக் கொண்டிருந்த சாலையின் வழியே தற்செயலாகத் தனது காரில் கடந்து சென்றுள்ளார்.
திமுக எம்பியின் காரைக் கண்டதும் பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர், திடீரென உணர்ச்சிவசப்பட்டுக் காரை நோக்கிக் கூச்சலிட்டுப் பலத்த முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் திடீரெனப் பரபரப்பான சூழல் உருவானது:
தொண்டர்களின் இந்த நடவடிக்கையை மேடையில் இருந்தபடியே கவனித்த அமைச்சர் விஜய் பாலாஜி உடனடியாகத் தலையிட்டார். "கட்சியின் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் யாரும் மீறக் கூடாது; எவ்விதச் சலசலப்புகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் அமைதி காக்க வேண்டும்" என்று மேடையிலிருந்தே தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அமைச்சரின் இந்த உடனடித் தலையீட்டைத் தொடர்ந்து தொண்டர்கள் அமைதியடைந்தனர். இந்தச் சம்பவத்தால் விழா நடைபெற்ற பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
