சட்டப்பேரவையில் 110 விதி அறிவிப்பு குறித்து காரசார விவாதம் - திமுக கடும் எதிர்ப்பு!
முந்தைய ஆட்சிக் காலத்தில் போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்ற முதலமைச்சர் விஜயின் அறிவிப்புக்குத் திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பாளர்கள் மீது முந்தைய திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் மனிதாபிமான அடிப்படையில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பை விதியின் கீழ் அறிவிக்கலாமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், தவெக ஆட்சியில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க இனிமேல் போராட்டம் நடத்துபவர்கள் மீதும் எவர் மீதும் வழக்கே பதிவு செய்ய மாட்டீர்களா என்றும் அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.
