திமுக பிரதிநிதியால் திருவாரூர் மிரண்டது... தாய்மாமன் சீராக ரூ.60 லட்சம் ரொக்கம், 50 சவரன் நகைகள், 100 தட்டுகளில் சீர்வரிசை - வைரலாகும் வீடியோ!
திமுக மாவட்டப் பிரதிநிதி ஒருவர் தனது சகோதரியின் மகளுக்கு வழங்கிய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடம்பரச் சீர்வரிசை விழா சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுக மாவட்டப் பிரதிநிதி கோகுல், தனது சகோதரியின் 10 வயது மகளின் காதுகுத்து விழாவிற்காக இரண்டு கண்ணாடிப் பேழைகளில் தலா ரூ. 30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சம் ரொக்கம், 50 சவரன் தங்க நகைகள், மற்றும் ரூ. 33 லட்சம் மதிப்பிலான மஹிந்திரா சொகுசு கார் ஆகியவற்றைச் சீர்வரிசையாக வழங்கியுள்ளார்.
ரொக்கம் மற்றும் நகைகளுடன் நிறுத்தாமல், 500 மூட்டை அரிசி, 50 கட்டு கரும்புகள் மற்றும் 500 வகை சீர்தட்டுகளைப் பல லாரிகளில் ஏற்றிவந்து உறவினர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். மேலும், ஆரத்தி எடுத்தவர்களுக்குப் பணம் அள்ளி வழங்கப்பட்டுள்ளது.
சீர்வரிசை பெற்றுக் கொண்ட சகோதரி மதுரை தனியார் கல்லூரியில் பேராசிரியையாகவும், அவரது கணவர் தஞ்சாவூரில் நெடுஞ்சாலைத் துறையில் கணக்காளராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் தந்தை ராமு திமுக கவுன்சிலராகப் பொறுப்பில் உள்ளார்.

அரசு கஜானா குறித்த பேச்சுகள் வலம்வரும் சூழலில் இந்த ஆடம்பரம் சர்ச்சையைக் கிளப்பிய போதிலும், கோகுல் திருவாரூரில் நிதி நிறுவனம், பேக்கரி, இனிப்பகம் மற்றும் வேளாங்கண்ணியில் லாட்ஜ் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருவதாகவும், அந்தத் தொழில் வருவாயைக் கொண்டே இந்தச் சீர்வரிசை வழங்கப்பட்டதாகவும் உறவினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
