தேசிய அரசியலிலும் திமுகவுக்கு பின்னடைவு... "திமுக வெளியேறியதால் கவலையில்லை.. இண்டியா கூட்டணியில் தவெக" - சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் அறிவிப்பு!

 
‘இண்டியா ‘இண்டியா

தேசிய அளவிலான இண்டியா கூட்டணியில் எந்தவிதப் பிளவும் இல்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக மட்டுமே எங்கள் கூட்டணியில் இருந்து தானாக விலகி இருக்கத் தொடங்கியுள்ளது. அதற்கு மாற்றாக தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய வலிமையான நட்பு சக்தி எங்களுக்குக் கிடைத்துள்ளது" என சிவசேனா உத்தவ் தாக்ரே அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் வெளிப்படையாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் மெகா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் ஆளும் அரசுக்கு எதிராகத் தேசிய அளவில் உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணியில், தமிழகத்தின் பிரதான கட்சியான திமுக மிக முக்கியப் பங்கு வகித்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த விறுவிறுப்பான சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தேசிய அரசியலில் மிகப்பெரிய களம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், திமுகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்துப் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கூட்டணியின் ஒற்றுமை குறித்துப் பேசிய சஞ்சய் ராவத், "தேசிய அளவில் எங்களது இண்டியா கூட்டணி இன்னும் வலுவாகவே உள்ளது. அதில் எந்தப் பிளவும் இல்லை. ஆனால், தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து, திமுக மட்டுமே எங்களுடனான தொடர்பைக் குறைத்துக் கொண்டு, கூட்டணியில் இருந்து விலகி இருக்கத் தொடங்கியுள்ளது. அவர்களின் இந்த நகர்வு குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை."

தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசியலில் புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பெருமிதத்துடன் பேசினார்.

"திமுக எங்களை விட்டு விலகிச் சென்றாலும், தமிழகத்தில் மக்கள் பேராதரவோடு எழுச்சி பெற்றுள்ள தவெக என்ற புதிய கட்சி தற்பொழுது எங்களின் புதிய நட்புக் கட்சியாகக் கிடைத்துள்ளது. எனவே, தமிழகத்தில் திமுகவிற்குப் பதிலாக ஒரு மிகச்சிறந்த மாற்று அணி தேசிய அளவில் எங்களுக்குக் கிடைத்துவிட்டது என்றே நாங்கள் கருதுகிறோம். வரும் காலங்களில் தவெக உடனான எங்களது நட்பு இன்னும் பலப்படும்" என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவின் முக்கியத்துவம் மாநில எல்லையைத் தாண்டி டெல்லி மற்றும் மும்பை வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதைச் சஞ்சய் ராவத்தின் இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. திமுகவை ஓரங்கட்டிவிட்டு, விஜய்யின் தவெகவுடன் கைகோர்க்கத் தேசியக் கட்சிகள் ஆர்வம் காட்டி வருவது, அறிவாலயத் தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகவும், தவெக தொண்டர்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாகவும் பார்க்கப்படுகிறது.