இன்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்!
தேசிய அளவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறேகடுகள் காரணமாகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில், இத்தேர்வு முறையை முற்றிலுமாக கைவிட வலியுறுத்தி திராவிடர் கழகம் (திக) சார்பில் இன்று (மே 16) தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சமூக நீதியைக் காக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், திராவிடர் கழகம் நடத்தும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் அனைத்து மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் இளைஞர் அணியினர் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
வினாத்தாள் கசிவு மோசடி தொடர்பாகச் சிபிஐ விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் நீட் தேர்வை நடத்துவது மாணவர்களைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் எனத் தமிழகக் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஏற்கனவே பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கையை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசரச் சட்டம் மூலம் அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இத்தகைய சூழலில், இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் திராவிடர் கழகத்தின் இந்த ஆர்ப்பாட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டக் குரலை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
