இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டனப் போராட்டம் அறிவிப்பு!

 
திமுக ஸ்டாலின்

அமைச்சர் டி. சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சர்ச்சை வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியான திமுக, அமைச்சரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இன்று ஜூன் 29, திங்கட்கிழமை தமிழகம் தழுவிய அளவில் பிரம்மாண்ட கண்டனப் போராட்டத்தை நடத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தின் கேலரி ஒன்றில் அமர்ந்து கொண்டு, அமைச்சர் சரத்குமார் தனது மொபைல் போன் திரையின் மீது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, வெள்ளை நிறப் பவுடர் போன்ற ஒரு பொருளை நசுக்கித் தூளாக்குவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பு ‘தக் லைஃப்’ என்ற கேப்ஷனுடன் அவரது நண்பர்கள் வட்டத்தில் பகிரப்பட்டதாகக் கூறப்படும் இந்த பழைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ, தற்போது அரசியல் தளத்தில் கசிந்துள்ளது. நபர் ஒருவர் போதைப்பொருளை நுகர்வதற்காகத் தயார் செய்யும் பாணியிலேயே அச்சு அசலாக இந்தச் செயல் இருப்பதாகத் திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை உள்ளிட்டோர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

உதயநிதி சட்டப்பேரவை

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, அமைச்சர் டி. சரத்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து அவசர விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பதிலடி கொடுத்துள்ளார். "சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது எனது ஒன்றரை வயதுக் குழந்தைக்குத் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. முழு மாத்திரையை விழுங்க முடியாத குழந்தைக்குத் தண்ணீரில் கலந்து கொடுப்பதற்காகவே, அவசரக் காலத்தில் எனது கிரெடிட் கார்டு மூலம் மாத்திரையை நசுக்கித் தூளாக்கினேன்" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு நடுவே தம்மால் எப்படிப் போதைப்பொருள் பயன்படுத்த முடியும் என்றும், அரசியல் உள்நோக்கத்தோடு பரப்பப்படும் இந்த வதந்தி தங்களது குடும்பத்திற்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள திமுக, இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து அரசுக்குக் கடுமையான நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அமைச்சர் சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக முதலமைச்சர் நீக்க வேண்டும் என வலியுறுத்தி, திமுக மாணவரணி சார்பில் இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிரம்மாண்ட கண்டனப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன.

உதயநிதி

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் சென்னையில் மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி வைத்து, போதைப்பொருளுக்கு எதிராகக் கடுமையான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிய அதே நாளில், அவரது சொந்த அமைச்சரவைச் சேர்ந்தவர் மீதே இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ளது தவெக அரசுக்குப் பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

"போதைப்பொருள் ஒழிப்பில் தவெக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், முதல்வர் விஜய் உடனடியாகத் தனது அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திமுக வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் காரணமாகத் தவெக மற்றும் திமுக தொண்டர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் தற்பொழுது கடுமையான வார்த்தைப் போரும், அரசியல் பதற்றமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.