நாளை தவெக அரசுக்கு எதிராக ஆளுநரைச் சந்தித்து திமுக மீண்டும் புகார்!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக, குதிரை பேரப் புகார்களை முன்வைத்து நாளை தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து திமுக மீண்டும் புகார் மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "தவெகவினர் எங்களை அணுகியதன் காரணமாகத்தான் நாங்கள் அவர்களுடன் இணைந்தோம்" என்று குறிப்பிட்டிருந்தார். மாநிலத்தில் தவெக அரசு தங்களது ஆட்சியைத் தக்கவைக்கவும், பலப்படுத்தவும் எதிர்க்கட்சி மற்றும் தோழமைக் கட்சிப் பிரமுகர்களைக் குறிவைத்துத் தீவிரமாகக் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்பதற்கு இந்த வாக்குமூலமே மிக முக்கியச் சான்று எனத் திமுக தரப்பு சுட்டிக்காட்டுகிறது. இந்த அதிகாரப்பூர்வ பேட்டியையே முதன்மை ஆதாரமாக வைத்து ஆளுநரிடம் முறையிட திமுக முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான குழுவினர் ஆளுநரைச் சந்தித்துத் தவெக அரசு மீது பல்வேறு புகார்களை அளித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக நாளை அளிக்கப்படவுள்ள புகாரிலும் பின்வரும் விவகாரங்கள் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.
திமுக மற்றும் இதர எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்குத் தவெகவில் இணையக் கோரிப் பல கோடி ரூபாய் மற்றும் அமைச்சர் பதவிகள் பேரம் பேசப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள். முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக முக்கியப் பிரமுகர்களைக் கைது செய்து, காவலில் வைத்துத் தவெகவில் இணையுமாறு அதிகாரிகள் மூலம் வற்புறுத்தியதாக எழும் புகார்கள்.

ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி போன்ற அதிகாரிகள் அல்லாத வெளிநபர்கள் தவெக அரசின் முக்கிய அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகக் கூறப்படும் விவகாரம். தவெக அரசு தங்களது அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஆள் பிடிக்கும் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், தமிழகத்தில் குதிரை பேரத்தை ஊக்குவித்து வருவதாகவும் ஆளுநரிடம் திமுக நாளை நேரில் வலியுறுத்தவுள்ளது. தவெக அரசுக்கு எதிராகத் திமுக எடுத்து வரும் இந்தத் தொடர் சட்ட ரீதியான மற்றும் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடிக் திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
