18 தொகுதிகளில் திமுக vs பாஜக நேரடி மோதல் - நட்சத்திரத் தொகுதிகள் லிஸ்ட்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் வெளியிட்டுள்ளன. இதில், அதிமுக கூட்டணியில் 27 இடங்களைப் பெற்றுள்ள பாஜக, அதில் 18 முக்கியமான தொகுதிகளில் நேரடியாக திமுக வேட்பாளர்களை எதிர்கொள்கிறது.
பாஜக மற்றும் திமுக வேட்பாளர்கள் மயிலாப்பூர், ஆவடி, திருவண்ணாமலை, கோவை வடக்கு, நாகர்கோவில், திருச்செந்தூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராதாபுரம், திருப்பத்தூர், சாத்தூர், வாசு, தேவநல்லூர், அவிநாசி, ராசிபுரம், மானாமதுரை, திருப்பூர் தெற்கு ஆகிய 18 தொகுதிகளில் நேருக்கு நேர் களம் காணுகின்றன.
இதில் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் சபாநாயகர் அப்பாவு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் களம் இறங்குவதால் இங்குப் போட்டி கடுமையாக இருக்கும்.

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலு, திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர்த்து பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது.
கொங்கு மண்டலத்தின் முக்கியத் தொகுதியான கோவை வடக்கில் திமுக - பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாகர்கோவில், ராமநாதபுரம் போன்ற பாஜக செல்வாக்குள்ள தொகுதிகளில் திமுக நேரடியாக மோதுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கடந்த 2021 தேர்தலை விட இந்த முறை பாஜக கூடுதல் இடங்களில் போட்டியிடுவதாலும், குறிப்பாக திமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் தொகுதிகளில் தாமரை களம் இறங்குவதாலும், இந்த 18 தொகுதிகளின் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'திராவிட மாடல்' மற்றும் 'மோடி காரணி' ஆகிய இரண்டுக்கும் இடையிலான நேரடிப் போட்டியாக இது பார்க்கப்படுகிறது.
