திமுகவின் டெண்டர் ரத்து செய்ததை வாபஸ் பெற்றது தவெக அரசு - 1,000 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல்!
சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்த டெண்டர் ரத்து உத்தரவைத் தவெக அரசு இன்று வாபஸ் பெற்றுள்ளது.
சென்னைப் பெருநகரப் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையையும் போக்குவரத்துத் தேவைகளையும் திறம்படச் சமாளிக்கும் நோக்கில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தன் சேவையை நவீனப்படுத்தவும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டது. இதன் ஒரு பகுதியாக, கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் தனியார் பங்களிப்புடன் கூடிய மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில் 1,000 புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அதாவது கடந்த மார்ச் மாதத்தில் இந்த டெண்டர் கோரப்பட்டது. இருப்பினும், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த டெண்டரைத் திறப்பதற்கான தேதியானது பல்வேறு காரணங்களைக் கூறி சுமார் 11 முறை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நிர்வாகக் காரணங்களைக் குறிப்பிட்டு அந்த டெண்டரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் நேற்று அதிரடியாக ரத்து செய்தது.
மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் டெண்டர் திடீரென ரத்து செய்யப்பட்ட விவகாரம் பொதுமட்டத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தையும் கடுமையான எதிர்ப்புகளையும் சம்பாதித்தது. நகர்ப்புறப் போக்குவரத்து மேம்பாட்டிற்கு மின்சாரப் பேருந்துகளின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கைகளையும் கடுமையான எதிர்ப்புகளையும் கருத்தில் கொண்டு, டெண்டர் ரத்து செய்யப்பட்ட உத்தரவைத் தவெக அரசு உடனடியாக இன்று வாபஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுவதற்கான திட்டப் பணிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.
