“விஜய் ஆட்சி அமைக்க திமுக முட்டுக்கட்டை போடாது” - ஸ்டாலின் திட்டவட்டம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலுடன் ஆளுநரைச் சந்தித்த விஜய்க்கு, முழுமையான பலத்தை நிரூபித்தால் மட்டுமே அனுமதி உண்டு என ஆளுநர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இந்த இக்கட்டான அரசியல் சூழலில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கப் போவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சியமைப்பதில் திமுக எவ்வித இடையூறும் செய்யாது என்றும், 6 மாத காலத்திற்கு அவர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களைத் தவெக அரசு தொடர வேண்டும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்குவது கடினமான காரியம் என்றாலும், திமுக அரசு வழங்கிய 1,000 ரூபாயையாவது வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தவெக அளித்த இலவச சிலிண்டர் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டால் அது மகிழ்ச்சி அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உடனடியாக ஒரு தேர்தலைச் சந்திப்பதையோ அல்லது தமிழகத்தில் அரசியலமைப்பு ரீதியான குழப்பங்கள் ஏற்படுவதையோ திமுக விரும்பவில்லை என மு.க.ஸ்டாலின் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் புதிய அரசு அமைவதற்கான ஒரு வாய்ப்பு திமுக தரப்பிலிருந்து மறைமுகமாகத் திறக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் நிபந்தனைகள் மற்றும் திமுகவின் இந்த நிலைப்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விஜய் தலைமையிலான தவெக அரசு அமையுமா அல்லது அரசியல் களம் மீண்டும் ஒரு புதிய திருப்பத்தைச் சந்திக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
