அண்ணா அறிவாலயத்தில் நிலவும் அமைதி... தேர்தல் முடிவுகளால் களை இழந்த திமுக தலைமை அலுவலகம்!

 
dmk dmk

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி ஆளுங்கட்சியான திமுக கூட்டணிக்கு மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட முக்கிய தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தற்போதைய நிலவரத்தால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தத் தேர்தல் பின்னடைவு காரணமாகச் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் மக்கள் நடமாட்டமின்றி முற்றிலும் வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போதும் தொண்டர்கள் கூட்டத்தால் களைகட்டும் அந்தப் பகுதி இப்போது நிசப்தமாக மாறியுள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக வெளியாகி வரும் அடுத்தடுத்த முன்னணி நிலவரங்கள் அறிவாலயத்திற்கு வந்திருந்த ஒருசில தொண்டர்களையும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பச் செய்துள்ளன.

வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக அறிவாலய வளாகத்தில் முன்னதாகவே மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் மற்றும் அலங்கார மேடைகள் தற்போது அவசர அவசரமாக அகற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையில் செய்யப்பட்டிருந்த அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றம் மற்றும் அறிவாலயத்தின் தற்போதைய நிலைமை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.