வாக்கு எண்ணும் மையத்தில் திமுக முகவர் மாரடைப்பால் திடீர் மரணம்!

 
dmk dmk

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில், திமுக முகவராகப் பணியாற்றிய பூண்டி மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் பாஸ்கர் (58) இன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனின் முகவராக அவர் பணியாற்றி வந்தார். வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த பாஸ்கருக்குக் காலை 9 மணி அளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக முகவர்கள் மற்றும் அங்கிருந்த தேர்தல் பணியாளர்கள், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பாஸ்கர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கடுமையான அரசியல் போட்டி நிலவி வந்த வாக்கு எண்ணும் மையத்தில், ஒரு மூத்த நிர்வாகியின் திடீர் மரணம் அங்கிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி மாற்று முகவர் நியமிக்கப்பட்டுப் பணிகள் தொடர்ந்தாலும், பாஸ்கரின் மறைவு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பாஸ்கரின் உடலுக்குத் திமுக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.