தமிழக அரசியலில் மெகா திருப்பம்... திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கத் தீவிரம்!

 
அதிமுக அதிமுக

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும் ஆட்சியமைப்பதில் நீடித்து வந்த இழுபறி, தற்போது ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை நோக்கித் திரும்பியுள்ளது. தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிக்கத் திணறி வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி திமுகவின் வெளிப்படையான ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சி.வி. சண்முகத்தின் உறவினர் வீட்டில் ரகசியமாகத் தொடங்கியுள்ளன.

இந்த அதிரடித் திருப்பத்தை உறுதி செய்யும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மூத்த நிர்வாகிகள் எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி. முனுசாமி, தவெக-வுக்கு அதிமுகவின் ஆதரவு கிடையாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் அதிமுக எம்எல்ஏ-க்கள் கட்சி மாறாமல் இருக்க அவர்களைப் புதுச்சேரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டப் போராட்டங்களுக்கு இடையே திமுகவின் ஆதரவு கடிதத்தைப் பெற்று ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாகக் காய்நகர்த்தி வருகிறது.

தற்போதைய கணக்குப்படி திமுக கூட்டணி 73 இடங்களையும் அதிமுக கூட்டணி 53 இடங்களையும் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவர்களின் 5 இடங்கள் போக திமுக-விடம் 68 இடங்கள் உள்ளன. இந்த 68 இடங்களும் அதிமுக-வின் 53 இடங்களும் இணைந்தால் மொத்த எண்ணிக்கை 121-ஆக உயரும், இது ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மையை விட அதிகம். திமுக வெளியில் இருந்து ஆதரவு அளித்து எதிர்க்கட்சியாகச் செயல்பட முடிவு செய்துள்ளதால் அதிமுக மீண்டும் அரியணை ஏறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. இந்த மெகா கூட்டணி தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.