திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்தது! "முதுகில் குத்திவிட்டீர்கள்" - இணையத்தில் வசைபாடும் உடன்பிறப்புகள்!

 
திமுக விஜய் திமுக விஜய்

தமிழக அரசியல் வரலாற்றில் நீண்டகாலமாகப் பயணித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக முறிந்துள்ளது. தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் காங்கிரஸைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

தவெக 108 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை வழங்க காங்கிரஸ் முன்வந்துள்ளது. "காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவும், சமூக நீதியைப் பாதுகாக்கவும் விஜய்க்கு ஆதரவு அளிக்கிறோம்" என காங்கிரஸ் அறிவித்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திமுக தலைமை மற்றும் தொண்டர்கள், காங்கிரஸின் இந்த நகர்வை 'துரோகம்' என வர்ணிக்கின்றனர்.

விஜய்

திமுக-வின் ஆதரவால் ராஜ்யசபா எம்.பி-க்களாக இருப்பவர்கள் மற்றும் கடந்த தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டவர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். "இனி ஒருபோதும் திமுக கூட்டணிப் பக்கம் வந்துவிடாதீர்கள்" என 'X' (முன்னாள் ட்விட்டர்) மற்றும் முகநூலில் திமுக தொண்டர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் #ByeByeCongress போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

காங்கிரஸின் இந்த முடிவால் தேசிய அளவிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தரப்பில், "மத்தியில் அதிகாரத்திற்காக எங்களைப் பயன்படுத்திவிட்டு, மாநிலத்தில் பதவிக்காக வேறொரு பக்கம் சாய்வது முறையல்ல" எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்த 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' தற்போது சிதறிப் போயுள்ளது.

ஆளுநர் விஜய்

தங்கள் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், "தமிழகத்தில் ஒரு மாற்றத்தை மக்கள் விரும்பியுள்ளனர். அந்த மாற்றத்திற்குத் தடைக்கல்லாக இருக்க விரும்பாமல், ஒரு புதிய இளைஞரின் (விஜய்) முயற்சிக்குத் தோள் கொடுக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.