திமுக எ.வ.வேலு மீது 8 பிரிவுகளில் வழக்கு.. 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

 
அமைச்சர் எ.வ.வேலு உறுதி

திமுகவின் முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உட்பட 11 பேர் மீது ரூ.3.23 கோடி டெண்டர் முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, எ.வ.வேலுவுக்குத் தொடர்புடைய 13 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில், கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 'சங்கரானந்த இன்ப்ரா' என்ற தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது.

எ.வ.வேலு

ஆனால், அந்தப் பணிகள் எதுவும் களத்தில் முழுமையாக நடைபெறாமலேயே, போலியாகக் கணக்குக் காட்டி சுமார் ரூ.3.23 கோடி அளவுக்குப் பெருமளவில் நிதி முறைகேடு மற்றும் ஊழல் நடந்துள்ளதாக ஊழலுக்கு எதிரான 'அறப்போர் இயக்கம்' லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விரிவான ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தது.

அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறையின் முன்னாள் பொறியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகள் உட்பட மொத்தம் 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

வேலு

முறைகேடாக டெண்டர் வழங்கி அரசுப் பணத்தைக் கையாடல் செய்தது, கூட்டுச் சதி உள்ளிட்ட மொத்தம் எட்டு கடுமையான பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் எ.வ.வேலுவின் சொந்த மாவட்டமான திருவண்ணாமலை உள்ளிட்ட அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான 13 முக்கிய இடங்களில் இன்று அதிகாலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.

சோதனையின் முடிவிலேயே எவ்வளவு ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் கைப்பற்றப்பட்டன என்பது தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மு.க.ஸ்டாலினுடன் உதயநிதி ஸ்டாலின் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்பொழுது முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஊழல் வழக்கில் சிக்கியிருப்பது திமுகவிற்கு மேலும் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.