‘திமுக தீய சக்தி’ அரசு பேருந்தின் பெயர் பலகையில் அதிர்ச்சி... ஓட்டுநர், நடத்துநர்கள் 5 பேர் சஸ்பெண்ட்!
திருச்சியிலிருந்து கடலூர் சென்ற அரசுப் பேருந்தின் டிஜிட்டல் எல்இடி பெயர் பலகையில் ஆளுங்கட்சியான திமுகவை விமர்சிக்கும் வகையில் அவதூறு வாசகங்கள் இடம்பெற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் உட்பட 5 பேரை விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில், திமுகவினரை விமர்சிக்கும் வகையிலான சில வாசகங்கள் மாறி மாறி ஒளிபரப்பாகியுள்ளன. அந்தப் பெயர் பலகையில் ‘எங்க உங்க அப்பாவையே காணோம்’, ‘ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி’, ‘கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்ட ஸ்டாலின் அங்கிள், கக்கூஸ் லீடர் உதயநிதி’ போன்ற சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள போக்குவரத்துக் கழக அதிகாரிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் கவனக்குறைவால் இந்த அவதூறு வாசகங்கள் எல்இடி பலகையில் தோன்றியிருக்கலாம் என்றும், பேருந்தில் பயணித்த பயணிகளில் யாரேனும் இதனைப் பதிவேற்றியிருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்தச் செயலில் நேரடியாக ஓட்டுநர், நடத்துநர்கள் ஈடுபடவில்லை என்றாலும், உரிய கண்காணிப்பு இல்லாத காரணத்தினால் பணியின் மீதான கவனக்குறைவு எனக் கருதி ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் உட்பட 5 பேரைச் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
