"குற்றத்தை மறைக்க விஜய் நாடகம்" - திமுக ஐடி விங் விமர்சனம்!
அரசியல் பயணமாகக் கரூர் மாவட்டத்திற்குச் சென்றுள்ள முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அங்கு நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அரசு வேலை மற்றும் நிவாரணங்களை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையைத் தங்களது குற்றத்தை மறைப்பதற்காக நடத்தப்படும் மலிவான அரசியல் நாடகம் எனக் குறிப்பிட்டு திமுக தகவல் தொழில்நுட்ப அணி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசல் விபத்தின் போது முதலமைச்சரின் செயல்பாடு பொறுப்பற்றதாக இருந்தது என திமுக ஐடி விங் சாடியுள்ளது. "கரூரில் தவெக நடத்திய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிப் பச்சைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் எனப் பல அப்பாவி உயிர்கள் கொடூரமாகப் பலியானபோது, எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் அந்த இடத்தை விட்டு உடனடியாக ஓடி மறைந்தவர் தான் இந்த விஜய். விபத்து நடந்து முடிந்து 285 நாட்கள் கழித்து, இன்று மீண்டும் அதே இடத்திற்குச் சென்று அவர் அரசியல் செய்வது பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்" என விமரிசித்துள்ளது.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கரூர் விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட காவல்துறை நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல் என்று திமுக ஐடி விங் குற்றம் சாட்டியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் கரூர் விபத்தின் உண்மைப் பின்னணியை முழுமையாக மறைக்கும் நோக்கில், அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த 19 உயர் காவல் அதிகாரிகளைத் திட்டமிட்டுப் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.

அன்று விபத்து நடந்தபோது வராத முதலமைச்சர் விஜய், தற்பொழுது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது தங்களது சொந்தக் குற்றத்தை மூடிமறைக்கப் பயன்படுத்தும் ஒரு மலிவான 'வாக்குக் கமிஷன்' நாடகம் தவிர வேறொன்றும் இல்லை எனத் திமுக ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் கடுமையாக விமரிசித்துப் பதிவிட்டுள்ளது.
