தமிழகத்தை போதைப்பொருட்களின் கூடாரமாக மாற்றிய திமுக - நயினார் நாகேந்திரன் ஆவேசம்!
விழுப்புரத்தில் கஞ்சா போதையில் அராஜகம் செய்த கும்பலைத் தட்டிக்கேட்ட இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் வன்முறை பூமியாக மாறி வருவதாகச் சாடியுள்ளார்.
விழுப்புரத்தில் கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த ஒரு கும்பலை, அங்கிருந்த 4 இளைஞர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் அந்த 4 இளைஞர்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், திமுக அரசின் மெத்தனப் போக்காலும், திறனற்ற நிர்வாகத்தாலும் தமிழகம் இன்று போதைப்பொருட்களின் கூடாரமாக மாற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக, மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் தமிழகமே வன்முறையின் தொட்டிலாக மாறிவிடும் அபாயம் உள்ளது. கஞ்சா போதையில் நடக்கும் அராஜகங்களைத் தட்டிக்கேட்கும் சாமானிய மனிதர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை முன்வைத்து பாஜக தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்களை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராகப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.
