திமுகவில் அடுத்த டார்கெட்... நில ஆக்கிரமிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன்!
திமுக முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசனும் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். அவர் மீது நில ஆக்கிரமிப்பு மற்றும் மோசடி புகார்கள் எழுப்பப்பட்டுள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'PCM Sons' என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர், முதலமைச்சரின் தனிப்பிரிவில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராகப் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் உள்ள 5,500 சதுர அடி பரப்பளவு கொண்ட தனியார் நிலம் அதுவாகும்.

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுகவின் தற்காலிகத் தேர்தல் பணிமனை அலுவலகமாகப் பயன்படுத்துவதற்காக, இந்த இடம் 6 மாதக் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நபரின் முகவரி முற்றிலும் போலியானது என்பதைப் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் சமீபத்தில் தான் கண்டறிந்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து குத்தகை காலம் முடிந்த பின்னரும், அந்த நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்கத் தா.மோ. அன்பரசன் தரப்பு மறுத்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தா.மோ. அன்பரசனின் உதவியாளர் அறிவுறுத்தியதன் பேரில் அந்த நிலம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அதற்குரிய எந்தவொரு வாடகையையும் அவர்கள் செலுத்தவில்லை. சட்டவிரோதமாகத் தனது சொத்தை லீசுக்கு எடுத்து ஏமாற்றியதுடன், அந்த 5,500 சதுர அடி நிலத்தை நிரந்தரமாகத் தங்களுக்குள்ளேயே ஆக்கிரமித்து வைத்துக் கொள்ளத் திட்டமிட்டு முயற்சி நடப்பதாகவும் ராஜேஷ் சோமசுந்தரம் தனது புகாரில் விவரித்துள்ளார்.
எனவே, இந்த நில ஆக்கிரமிப்பு மற்றும் மோசடி விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் இதற்குத் துணையாக இருந்த தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நில உரிமையாளர் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அடுத்தடுத்து திமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மீது புகார்களும் விசாரணைகளும் பாய்ந்து வருவது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
