திமுக வியூகம் தீவிரம்... ஸ்டாலின் 5-வது கட்ட தேர்தல் பிரசாரம் திருவள்ளூரில் தொடக்கம்!

 
ஸ்டாலின் பிரசாரம் ஸ்டாலின் பிரசாரம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக-வின் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. "மீண்டும் திமுக" என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 5-வது கட்ட பிரசாரப் பயணத்தைத் திருவள்ளூரில் தொடங்குகிறார்.

தஞ்சாவூரில் தனது 4-வது கட்ட பிரசாரத்தை நேற்று வெற்றிகரமாக முடித்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று புதுக்கோட்டையில் தனது பிரசாரத்தைத் தொடர்கிறார். இன்று மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கந்தர்வக்கோட்டை, விராலிமலை உள்ளிட்ட 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்குச் சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூரில் நடைபெறும் கூட்டத்தில் காரைக்குடி உள்ளிட்ட 4 தொகுதி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளார்.

ஸ்டாலின் திமுக

பிரசார மேடைகளில் மட்டுமல்லாது, களத்திலும் இறங்கி முதலமைச்சர் ஸ்டாலின் மக்களைச் சந்தித்து வருகிறார். இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டபோது, பொதுமக்களுடன் இயல்பாக உரையாடினார். அப்போது திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியை ஆதரித்து அவர் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை) முதலமைச்சர் தனது 5-வது கட்ட பிரசாரத்தைத் திருவள்ளூரில் தொடங்குகிறார். அன்று மாலை 5 மணிக்குத் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், அன்றிரவு 7 மணிக்கு ராணிப்பேட்டையில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

ஸ்டாலின்

தொடர்ந்து ஏப்ரல் 14-ஆம் தேதி மாலை வேலூரிலும், இரவு திருப்பத்தூரிலும் பிரசாரம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சேலம் மாவட்டங்களில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக அவர் தீவிரமாக வாக்கு சேகரிக்க உள்ளார்.

வரும் 21-ஆம் தேதி மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளதால், அதற்குள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒருமுறை வலம் வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். காலை, மாலை என இருவேளைகளிலும் பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு என திமுக-வின் பிரசார இயந்திரம் முழு வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.